×

ஊரடங்கை தடுப்பது மக்கள் கையில் தான் உள்ளது தமிழகத்தில் ரத்த பரிசோதனை அதிவேகத்தில் நடத்த வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பதும், தடுப்பதும் மக்கள் கையில் தான் உள்ளது என்றும், அதிவேக ரத்த பரிசோதனை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மட்டுமே கொரோனா  பரவலைத் தடுத்து விட முடியாது. மாறாக, அந்த ஆணை கடைபிடிக்கப்படுவதை பொறுத்தே வெற்றி அமையும். அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு பெரும்பான்மையான மக்களால் கடைபிடிக்கப்பட்டது.  அதனால் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டது என்பது உண்மை.   

ஊரடங்கின் மூலம் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்த முடியாது. நோய் பாதித்த பகுதிகளில்  வாழும் மக்களை சோதித்து அவர்களுக்கு பாதிப்பு இருந்தால், மருத்துவம் அளித்து குணப்படுத்த வேண்டும். அதன்பிறகு தான் ஊரடங்கு ஆணையை தளர்த்த முடியும். அதற்கு கொரோனா நோய் பாதித்த பகுதிகளில் அதிவேக ரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.  அதற்கு தேவையான கருவிகளை உடனடியாக இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 40 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், அது மீண்டும் நீட்டிக்கப்படாமல் இருப்பது  அரசு மற்றும் பொதுமக்கள் கைகளில் தான் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை முழுமையாக மதித்து நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : government ,Ramadas ,blood test ,Tamil Nadu Ramadas , Curfew, Government of Tamil Nadu, Ramadas, Corona
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக...